சனி, 17 ஜனவரி, 2015




அரசியலமைப்பு சீர்திருத்தப்பணி ஆரம்பம்; ரணில் தலைமையில் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்; ஹக்கீம், நிஸாம் பங்கேற்பு!


NAC

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஆலோசனை பேரவையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்நேற்று  வெள்ளிக்கிழமை மாலை அலறி மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.சுமந்திரன், ஜனநாயக கட்சித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர கலாநிதி ஜயம்பதி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சமான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தேசிய ஆலோசனை பேரவையின் நிறைவேற்றுக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பிரதமர் தலைமையில் மீண்டும் கூடி அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பிலான வரைபுகளை தயாரிக்கவுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், தலைவர் ஹக்கீம் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசிய ஆலோசனை பேரவை  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: