சனி, 17 ஜனவரி, 2015

வாய்க்காலில் மீன் பிடித்துக்கொண்ட நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்





மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள 12ஆம் கொளனியைச் சேர்ந்த 45 வயதுடைய 11 பிள்ளைகளின் தந்தையான சம்சுதீன் நூறுமுஹம்மது என்பவர் ஆலையடி எம்-27ஆம் பிரதான வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டடிருந்த போது இன்று காலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சடலத்தினை தேடியவுடன் குறிப்பாக இரண்டு மணித்தியாலத்திற்கு பின்னர் ஆலயடி வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாலத்தின் கீழ் மீட்கப்பட்டு சடலம் மத்தியமுகாம் வைத்திசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வேளாண்மைகளுக்கு பாய்ச்சுவதற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அவ்வாய்க்காலில் மீன்பிடிக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீர் திறந்து விடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வாய்க்காலில் குளிப்பதையும், மீன்பிடிக்க முயற்சிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு மத்தியமுகாம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ரி.ஏ.டி.எஸ்.செனவிரத்ன பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.



அரசியலமைப்பு சீர்திருத்தப்பணி ஆரம்பம்; ரணில் தலைமையில் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்; ஹக்கீம், நிஸாம் பங்கேற்பு!


NAC

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஆலோசனை பேரவையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்நேற்று  வெள்ளிக்கிழமை மாலை அலறி மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.சுமந்திரன், ஜனநாயக கட்சித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர கலாநிதி ஜயம்பதி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சமான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தேசிய ஆலோசனை பேரவையின் நிறைவேற்றுக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பிரதமர் தலைமையில் மீண்டும் கூடி அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பிலான வரைபுகளை தயாரிக்கவுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், தலைவர் ஹக்கீம் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசிய ஆலோசனை பேரவை  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.