சனி, 15 மார்ச், 2014

தயிர் விற்பனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது




அம்பாறை மாவட்டத்தில் பால் கொள்வனவு மேற்கொள்ளுமாறும், தயிர் விற்பனை செய்வதற்கு ஏற்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இவ் விடயத்தில் அச்சமோ, சந்தேகமோ கொள்ளத் தேவையில்லை எனவும் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.சி.எம்.ஜூனைட் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோய்க் காரணமாக கடந்த (19) ஆம் திகதி முதல் மாடு, ஆடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மற்றும் உற்பத்தி பொருட்கள் நாட்டிலுள்ள 6 மாவட்டங்களில் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள உள்ளுர் கடைகளில் தடைசெய்யப்பட்டுள்ள உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் வைத்தியரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

சந்திரிக்கா, ஹக்கீம் ஆகியோரின் உண்மைகளை வெளியிடுவோம்: பொதுபல சேனா மிரட்டல்



20140313-192951.jpgமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் உண்மையான செயற்பாடுகளை இன்று வெளியிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திரிக்கா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். விசேட ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை நாம் வெளியிடுவோம்.
சந்திரிக்காவினால் முன்னர் செய்ய முடியாததை தற்போது செய்ய முனைவது பற்றி நாம் கூறுவோம்.

அதேபோல் ஹக்கீமின் விடயங்கள் பற்றியும் நாம் வெளியிடுவோம். ஜெனிவா போன்ற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான நிறுவனம் ஒன்று இலங்கையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பௌத்தம் அல்லது இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது இஸ்லாம் வழிப்பாட்டுத் தலங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அண்மையில் அறிக்கை ஒன்றை கையளித்திருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்டே ஞானசார தேரர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.