வியாழன், 24 அக்டோபர், 2013


widgeo.net

கல்முனை மேயரை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை

மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கல்முனை மாநகர சபை தேர்தல் 2011ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதனையடுத்து மேயரை நியமிப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. 

இதன்போது, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற சிராஸ் மீராசாஹிப் முதல் இரண்டு வருடங்கள் கல்முனை மேயராகவும் இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இறுதி இரண்டு வருடங்கள் மேயராகவும் செயற்படுவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.

இந்த நிலையில் சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயராக நியமிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. 

இதனால் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரை கல்முனை மேயராக நியமிக்குமாறு கட்சி தலைவருக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே கல்முனை மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கல்முனைக்கு விஜயம் செய்து ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் தனது இறுதி முடிவை அறிவிப்பதாக சிராஸ் மீராசாஹிப் கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு குறித்து நீதி அமைச்சர் ஹக்கீம் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. 

இதேவேளை, கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது புதிய உள்ளூராட்சி சட்டம் குறித்த விளக்கங்களை தேர்தல் ஆணையாளரிடமிருந்து கல்முனை மேயர் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கட்சியின் உத்தரவை மீறி தொடர்ச்சியாக மேயராக செயற்படுவதற்கு முடியுமா என்ற ஆலோசனைகளையும் கல்முனை மேயர் தேர்தல் ஆணையாளரிடமிருந்து பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கல்முனை மேயரினால் நிர்வகிக்கப்படும் மெட்ரோபொலிடன் தனியார் கல்வி நிறுவனத்தை தனியார் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கல்முனை மேயர் அழைப்புவிடுத்துள்ளதாக மேயர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே இந்த நிகழ்விற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் நீதி அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் அழைக்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.