சனி, 24 செப்டம்பர், 2011

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமதி

முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர அறிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தலையை மூடிய நிலையில், அடையாள அட்டை பெற புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் இதற்கு முன் அனுமதி மறுத்திருந்தது. தலைமுடி தெரியும் நிலை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் தலைவர்கள், அரசியல் வாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தொப்பியை அணிந்த நிலையில் அடையாள அட்டை பெற அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் அமைப்புகள் போன்றோர் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்து முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதன் போதே, முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் அடையாள அட்டைக்கான படம் பிடிக்க அனுமதி பெற்றுத்தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.
இனிமேல் முஸ்லிம் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய நிலையில், நெற்றியோ, காதோ மறையாதவாறு புகைப்படம் பிடிக்க அனுமதி வழங்குவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.