புதன், 12 அக்டோபர், 2011



widgeo.net

காலாவதியான டின் மீன்கள், உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை

காலாவதியான டின் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நவீன சந்தை கடைகள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.
காலாவதியாகும் தினத்தை அடைய 60 வீத நாட்கள் உள்ள நிலையிலிருக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்குக் குறைவான நாட்கள் உள்ள உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், காலாவதி திகதியை அண்மித்த பொருட்களையும் விற்கமுடியாது எனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
கொழும்பு உட்பட சில பகுதிகளில் உள்ள நவீன சந்தைகளில் புதிய டின் மீன்களுடன் காலாவதியான டின் மீன்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக வினவியதற்குப் பதிலளித்த அமைச்சின் செயலாளர் இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான நவீன சந்தைகள் மற்றும் கடைகளை திடீர் சோதனை செய்து காலாவதியான பொருட்களை கைப்பற்றவும் தண்டம் அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் கூறினார்.
இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது காலாவதியான பொருட்கள் விற்றமை, விலைப் பட்டியல் தொங்கவிடாமை, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றமை என்பன தொடர்பில் பிடிபட்ட வர்த்தகர்களிடமிருந்து 10.4 கோடி ரூபா தண்டம் அறவிடப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.