புதன், 18 டிசம்பர், 2013





ஒலுவில் காணி சுவீகரிப்பு: ஜனாதிபதி வழங்கிய காசோலைக்கான பணம் நிறுத்தம்



ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக சட்டப்படி சுவீகரிக்கப்பட்ட      காணி உரிமையாளர்களில் இருவருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட காசோலைகளுக்கான பணம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுக திறப்பு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்றது. இதன்போதே குறித்த இரண்டு உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

31.08.2013ஆம் திகதியிடப்பட்ட மக்கள் வங்கி கிளையின் இந்த காசோலைகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் மற்றும் நிதி உதவியாளர் ஆகிய இருவரும் கையொப்பமிட்டுள்ளனர்.

எனினும், குறித்த காசோலைகளை வங்கியில் வைப்பிலிட்டபோது குறித்த காசோலைக்கான பணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக 25.09.2013 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துறைமுகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், காணி சுவீகரிக்கப்பட்ட ஏனைய உரிமையாளர்களுக்கும் இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், குறித்த நட்டஈட்டுத் தொகையினை துரித கதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கமாறு கோரி காணிகளை இழந்தோர் சங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அண்மையில் மகஜரொன்றையும் அனுப்பியுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒலுவில் துறைமுக் நிர்மாண பணிக்காக 2008ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட     காணிகளுக்குரிய  விலை மதிப்பீடு அதிகூடியது என்ற அடிப்படையில் குறித்த தொகையினை ஏற்றுக்கொள்ள துறைமுக அதிகார சபை மறுத்துள்ளது.

இதனால் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படாமல் கடந்த ஐந்து வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி தலைமையில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் கடந்த 2013.04.01ஆம் திகதியன்று நடைபெற்ற காணி பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராயும் கூட்டத்தில் ஒலுவில் துறைமுக நிர்மாண பணிக்காக காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் காரணமாக அவ்விடயம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் சட்டப் பிரச்சினையற்ற காணி உறுதிகளை வைத்திருப்பவர்களுக்கு முதற்கட்ட நஷ்டஈட்டு கொடுப்பனவாக ஒரு பேர்ச் காணிக்கு 30இ000 ரூபா படி துரித கதியில் வழங்குவதற்கு  ஆவண செய்யும் படி பணிக்கப்பட்டது.

அத்துடன், இரண்டாம் கட்டக் கொடுப்பனவு சம்பந்தமாக காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்கும் படியும் துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அதன் பிற்பாடு கடந்த 2013.08.26 ஆம் திகதி அமைச்சர் அதாஉல்லாவின் தலைமையில் காணி இழந்தோர் குழுவினருக்கும் துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபே குணவர்தன, துறைமுக அதிகார சபையின் தலைவர் ஸ்ரீமத் பந்துவிக்கிரம ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அதில் துறைமுக திறப்பு விழாவிற்கு முன்னர் காணிகளை இழந்தவர்களுக்கு 01 பேர்ச் காணிக்கு 30,000 ரூபா படி முதற்கட்டக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் 02ஆம் கட்டக் கொடுப்பனவு சம்பந்தமாக கலந்துரையாடல் மூலம் சுமூகமாக தீர்த்து கொள்வோம் என்றும் தீமாணிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் 2013.09.01ஆம் திகதி ஒலுவில் துறைமுகம் திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்படும் வைபவத்தில் காணிகளை இழந்தவர்களில் இருவருக்கு முதற்கட்;ட நஷ்டஈட்டிற்கான காசோலைகள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

அதன் பிற்பாடு நாங்கள் 2013.09.03ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை சந்தித்து ஏனைய காணி உரிமையாளர்களுக்குரிய நஷ்டஈடு சம்மந்தமாக வினவியபோது        'காணிகளை இழந்தவர்களில் 20 பேருக்கு மட்டுமே 01 பேர்ச் 20,000 ரூபா படி நஷ்டஈடு வழங்குவதற்கு பணம் கிடைக்கப் பெற்றுள்ளது என்று பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அதனை 2013.10.18ஆம் திகதி காரியாலயத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளும் படியும் கூறினார். அதன்படி நாங்கள் 2013.10.18ஆம் திகதி பிரதேச செயலாளரை சந்தித்து எங்களின் நஷ்டஈட்டினை தரும்படி கோரினோம்.

அதற்கு துறைமுக அதிகார சபையினால் 20 பேருக்காக வைப்புச் செய்யப்பட்ட நட்டஈட்டிற்குரிய பணத்தினை தற்போது பிரித்து தருவதற்கு முடியாது என்றும் இவ்விடயம் சம்மந்தமாக அம்பாரை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்விஸுடன் கலந்துரையாடிய பின்னர் உரிய நட்டஈட்டினை தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் நாங்கள் 20 பேரும் 2013.10.01 ஆம் திகதி மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர் எங்களுக்குரிய நஷ்டஈட்டினை துரித கதியில் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் வாக்குறுதியளித்தார்.

அதன் பிற்பாடு 2013.10.04ஆம் திகதி எங்கள் காணிகளுக்குரிய ஆவணங்கள் மாவட்ட செயலாளரினால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவினால் பரீட்சிக்கப்பட்டு பொறுப்பேற்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எங்களுக்குரிய நஷ்டஈடு கிடைக்கவில்லை என்பதனை மன வேதனையுடன் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றோம்.

சம்பந்தப்பட்ட பொறுப்புதாரிகள் எங்களுடன் கலந்துரையாடலை நடாத்தி உரிய நஷ்டஈட்டைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமையானது எதுவித தடங்கலுமின்றி துறைமுகத்தை திறப்பதற்கு நடாத்தப்பட்ட நாடகமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: