சனி, 21 டிசம்பர், 2013

க.பொ.த.சாதாரண பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்





நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்  பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினர் தங்களுடைய விசனத்தை தெரிவித்துள்ளனர்.

க.பொ.த. (சா/த) பரீட்சையின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை விருப்பத்திற்குரிய பாடமாக குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் பாடத்திற்கான பரீட்சை நடைபெற்றது.  இந்த பரீட்சையில் பகுதி-II லேயே மேற்படி கேள்வி இடம்பெற்றுள்ளது.

வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வினாக்களில் ஐந்து வினாக்களுக்கு பரீட்சார்த்திகள் விடையளிக்க வேண்டும். அதில் முதலாவது வினா கட்டாயமானதாகும். அந்த முதலாவது வினாவில் மூன்றாவது பகுதி வினாவாகவே இந்த வினா உள்ளடக்கப்பட்டுள்ளது.

"இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?" என்றே அந்த வினாவில் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தொடர்பிலேயே முஸ்லிம் சமூகத்தினர் விசனம் வெளியிட்டுள்ளர்.

இந்த கேள்வியின் ஊடாக மாணவர்கள் மத்தியில் இஸ்லாமிய சட்ட மூலாதாரம் தொடர்பான பிழையான பார்வை உள்வாங்கப்படுகின்றது எனவும் முஸ்லிம் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து கல்வியமைச்சரின் கவனத்திற்கும் உரிய தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரவிருப்பதாக முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: