புதன், 25 செப்டம்பர், 2013


widgeo.net
     விக்னேஸ்வரனுக்கு கனடிய தமிழ்க் காங்கிரஸ் வாழ்த்து

தமிழ்க் கூட்டமைப்புக்கும் வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கனடிய தமிழ்க் காங்கிரஸ் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது. 
தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்தியிருக்கும் அந்த அமைப்பு அச்சுறுத்தலின் மத்தியிலும் அறுதிப் பெரும்பான்மை பலத்துடனான   வெற்றியை தமிழ்க் கூட்டமைப்பு  பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 
வட மாகாணத் தமிழர்கள் தொடர்பாக  எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு  செயற்பாடுகள் தொடர்பாகவும் அக்கறை காட்டப்படுவது  அவசியமென்ற அவர்களின்  ஜனநாயக உரிமைக்கு செவி சாய்ப்பது முக்கியமானதென்ற உணர்வை அவர்கள் வலுவான முறையில் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வட பகுதித் தமிழர்கள் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர்  என்று கனடிய  தமிழ்க் காங்கிரஸ் கூறியுள்ளது.
 அதேசமயம் இந்தத் தேர்தல் பெறுபேறுகள் மூலம் தமிழ் மக்களின் விருப்பத்தை இலங்கை அரசு அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமெனவும் உடனடியாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கனடிய தமிழ்க் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் இலங்கை அரசு  செல்வது அவசியம் என்பதை  தமிழ்க் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நியாய பூர்வமான கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு உதவும்  வகையில் சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா தனது செல்வாக்கை செலுத்த வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை: